Published on 29/04/2020 | Edited on 29/04/2020
மத சுதந்திரத்தை மீறும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பெயரும் இடம்பெற்றதற்கு, அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய ஆணையத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது.
சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம் அண்மையில் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் என்ற பட்டியல் ஒன்றை வெளியிட்டது. இதில் சீனா, சவுதி அரேபியா, இந்தியா, பாகிஸ்தான், எரித்ரியா, ஈரான், நைஜீரியா, வட கொரியா, தஜிகிஸ்தான், ரஷ்யா, சிரியா, துர்க்மெனிஸ்தான், பர்மா, வியட்நாம் என 14 நாடுகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. குறிப்பிட்ட இந்த நாடுகளில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த பட்டியலில் முதன்முறையாக இந்தியாவின் பெயர் இந்த ஆண்டு இடம்பெற்றுள்ளது. மேலும், மத சுதந்திரத்தை கடுமையாக மீறியதற்கு இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அவற்றிற்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராகக் கடுமையான பொருளாதார தடைகள் கொண்டுவரப்பட வேண்டும் என அவ்வமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும், டெல்லி கலவரம் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள இந்தியா, "சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணைய ஆண்டு அறிக்கையில் இந்தியா குறித்த குற்றச்சாட்டுகளை நாங்கள் நிராகரிக்கிறோம். இந்தியாவுக்கு எதிரான அதன் பக்கச்சார்பான மற்றும் ஒருதலைபட்சமான கருத்துகள் வழக்கமானதுதான். ஆனால் இந்த சந்தர்ப்பத்தில், அதன் ஒருதலைபட்ச தன்மை என்பது புதிய நிலைகளை எட்டியுள்ளது" என தெரிவித்துள்ளது.