திருச்சியில் இருந்து குஜராத்திற்கு சென்ற ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து குஜராத் மாநிலம் கங்கா நகர் வரை இந்தியன் ரயில்வே சார்பில் ஹம்சாஃபர் விரைவு ரயில் (வண்டி எண்: 22498) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வழக்கம் போல் திருச்சியில் இருந்து கங்காநகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது குஜராத்தின் வல்சாத் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் எஞ்சின் மற்றும் அதன் பின்புறம் உள்ள பி 1 என்ற 2 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள், மற்ற பெட்டிகளுக்கும் தீ பரவாமல் இருக்க ரயில் எஞ்சின் மற்றும் அதன் பின்புறம் உள்ள பி 1 என்ற 2 பெட்டிகளை மட்டும் தனியாக கழட்டி விட்டு மற்ற ரயில் பெட்டிகளைத் தனியாகப் பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளிலும் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் ரயிலில் இருந்த அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகளும், காவல்துறையினரும் ஆய்வு செய்து வருகின்றனர். குஜராத் மாநிலம் சூரத் நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.