இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகப்படுத்தப்பட்டு வருகின்றன. மே ஒன்றாம் தேதியிலிருந்து, 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும், மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் கரோனா தடுப்பூசியை நேரடியாக வாங்கிக்கொள்ளவும் மத்திய அரசு அனுமதியளித்தது. இந்தநிலையில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், தங்கள் ஊழியர்களுக்கான தடுப்பூசி திட்டத்தை அறிவித்துள்ளது.
மே ஒன்றாம் தேதி முதல், தங்கள் நிறுவன ஊழியர்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட அவர்களது குடும்பத்தினருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் சார்பாக தடுப்பூசி செலுத்தப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இந்த சுய தடுப்பூசி திட்டத்திற்கு ரிலையன்ஸ் - சுரக்ஷா என பெயரிடப்பட்டுள்ளது.