நவம்பர் 14, முன்னாள் பாரதப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி காந்தி திடலில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் நேருவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளுக்குக் கொடுக்கப்பட்ட தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். நீதிமன்றமே தனது முடிவை மாற்றிக் கொள்வது நியாயமல்ல. குற்றவாளிகள் அனுப்பிய கருணை மனுவின் மீது தமிழக ஆளுநர் உரிய நேரத்தில் முடிவு எடுக்காமல் காலதாமதப்படுத்தியதே ஏழு பேர் விடுதலைக்குக் காரணம். எங்கள் தலைவர்கள் சோனியா, ராகுல் வேண்டுமென்றால் பெருந்தன்மையாகத் தலைவர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை மன்னிக்கலாம். ஆனால் கட்சி தொண்டர்கள் நாங்கள் அதை மன்னிக்க மாட்டோம்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மத்திய அரசின் வழக்கறிஞர் தனது வாதங்களைத் தெளிவாக எடுத்து வைக்காததே இவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்குக் காரணம். மோடி தலைமையிலான மத்திய அரசு உடனடியாக நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்து ஏழு பேர் விடுதலையை ரத்து செய்ய வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.