![Reduction of interest rate on PF](http://image.nakkheeran.in/cdn/farfuture/yUxL19Wp2jXWTgMAoya2SMU0-a1_s55hgVU7e5JIsSI/1647072022/sites/default/files/inline-images/158_3.jpg)
பி.எஃப் மீதான வட்டி விகிதம் 8.1 சதவிகிதமாக குறைக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எஃப் மீதான வட்டி விகிதம், 2020-21 நிதியாண்டில் 8.5 சதவிகிதமாக வழங்கப்பட்டது. இந்த நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நிர்வாகக் கூட்டத்தில் இந்த வட்டி விகிதத்தை குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பி.எஃப் மீதான வட்டி விகிதம் 8.1 சதவிகிதமாக குறைக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் இந்தப் பரிந்துரைக்கு நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த வட்டி விகித குறைப்பு அமலுக்கு வரவுள்ளது.
நாட்டில் பணவீக்கம் அதிகரித்துவருவதால் பி.எஃப் மீதான வட்டி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் எனப் பல்வேறு தொழிற்சங்கங்கள் வலியுறுத்திவரும் நிலையில், இந்த வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பி.எஃப் மீதான வட்டி விகித குறைப்பு தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.