Skip to main content

32 பேரும் விடுதலை செய்யப்பட காரணம் இதுதான்..? தீர்ப்பில் நீதிபதிகள் அறிவிப்பு...

Published on 30/09/2020 | Edited on 30/09/2020

 

reason for babri masjid verdict

 

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. தொடக்கத்தில் மாநில போலீஸார் விசாரித்து வந்த இந்த வழக்கு, பின்னர் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உட்பட 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. மொத்தம் 45 முதல் தகவல் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழங்கில் தொடர்புடைய 17 பேர் விசாரணையின்போதே உயிரிழந்தனர். 

 

இதைத்தொடர்ந்து எஞ்சிய 32 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து லக்னோவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் தினந்தோறும் விசாரணை நடந்து வந்தது. மொத்தம் 351 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். கரோனா ஊரடங்கு காலத்தில் காணொளிகாட்சி மூலமாக அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் ஆஜராகி தங்களது வாக்குமூலத்தை அளித்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய லக்னோ சிபிஐ நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ், குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இதற்கான காரணம் குறித்து நீதிபதி தீர்ப்பில் தெரிவிக்கையில், "பாபர் மசூதி இடிப்பை அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் தான் தடுத்தனர். பாபர் மசூதி இடிப்பது என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது இல்லை. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான போதிய ஆதாரங்களை சிபிஐ சமர்பிக்கவில்லை" எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்