ATM மையங்களில் பணம் எடுக்க வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் கட்டணம் விதிப்பதற்கு ரிசர்வ் வங்கி அமைத்த குழு பரிந்துரைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியால் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட பரிந்துரைக் குழு, நாடு முழுவதும் ஏ.டி.எம்.-களில் மேற்கொள்ளப்படும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் வசூலிக்கப்படும் கட்டணங்களை அதிகரிக்கப் பரிந்துரைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. இந்தக் குழுவின் பரிந்துரைப்படி, ஏ.டி.எம். இயந்திரத்திலிருந்து ஒருமுறைக்கு அதிகபட்சமாக 5,000 ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படலாம் எனவும், இதைவிடப் பெரிய தொகையை ஒருவர் எடுக்கும் போது, அந்த வாடிக்கையாளரிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் எனவும் இந்தப் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் முறையீடு செய்தபோது, இந்தப் பரிந்துரை குறித்த தகவல் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம். பரிவர்த்தனை கட்டண கட்டமைப்பை மறு ஆய்வு செய்யக் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட இந்தக் குழு, அதன் பரிந்துரைகளை ரிசர்வ் வங்கியில் சமர்ப்பித்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கி அவற்றை ஏற்றுக்கொண்டதா என்பது குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.