2017-2018 ஆம் ஆண்டிற்கான வங்கிகளின் நிதிநிலைமை குறித்த தகவல்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டில் வங்கிகளில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்தலால் வங்கிகளுக்கு ரூ.41 ஆயிரத்து 167.23 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது கடந்த 2016-17 ஆம் ஆண்டில் ரூ.23 ஆயிரத்து 933 கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 72 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் வாங்கி மோசடி குறித்து கடந்த 2016-17-ம் ஆண்டில் 5076 வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 5917 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் தவறான வரவு செலவு அறிக்கையை அளித்தல், அன்னியச் செலவானி பரிமாற்றத்தில் மோசடிகள், டெபாசிட் கணக்குகள் போன்றவற்றில் அதிகமான மோசடிகள் நடந்துள்ளன. அதேபோல இந்த ஆண்டு வாராக்கடனின் அளவும் 10.39 லட்சம் கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலான மோசடிகள் 50 கோடிக்கு மேல் பரிவர்த்தனை நடைபெறும் கணக்குகள் வழியாகவே நடைபெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.