ராஜஸ்தானில் அசோக் கெலாட் ஆட்சியைக் கவிழ்க்க மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் பேரம் பேசியதாக வெளியான ஆடியோவை தொடர்ந்து அவர் மேஈது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு வரும் நிலையில், அம்மாநில அரசியல் சூழலில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இந்த சூழலில், தங்களது ஆட்சியைக் கலைக்க பாஜக திட்டமிடுவதாகவும், சட்டமன்ற உறுப்பினர்களுடன் குதிரைபேரத்தில் ஈடுபடுவதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்கக் காங்கிரஸ் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர் பன்வர் லால் சர்மாவிடம் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், பாஜக தலைவர் சஞ்சய் ஜெயின் ஆகியோர் பேரம் பேசியதாக ஒரு ஆடியோ நேற்று வெளியானது.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், குதிரை பேரத்தில் ஈடுபடும் பாஜகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. மேலும், கஜேந்திர சிங் செகாவத் மீது வழக்குப்பதிவு செய்வதோடு, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்குமளவு எங்கிருந்து பணம் வந்தது என்பதையும் விசாரிக்க வேண்டும் எனக் காங்கிரஸ் வலியுறுத்தியது. இந்நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் குதிரைபேரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுத் தொடர்பாக ராஜஸ்தான் போலீஸார், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பன்வர்லால் சர்மா மற்றும் பாஜக தலைவர் சஞ்சய் ஜெயின் ஆகியோருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.