தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் சூழலில், டெல்லி, ராஜஸ்தான், ஒடிஷா, ஹரியானா ஆகிய மாநிலங்கள் பட்டாசு விற்பனைக்கும், பட்டாசு வெடிப்பதற்கும் தடை விதித்தன. காற்று மாசு காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், பட்டாசுக்கான தடையை நீக்குமாறு அந்த நான்கு மாநிலங்களின் முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், கரோனாவால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டிருப்பதையும், சிவகாசி பட்டாசு தொழிலை சார்ந்து சுமார் 8 லட்சம் பேர் உள்ளதையும் முதல்வர் மு.க ஸ்டாலின் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும் "உச்ச நீதிமன்றம் ஏற்கனவே சில வகையான பட்டாசுகளுக்கு தடை விதித்துள்ளது. காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவு மாசு ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம் என உச்ச நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது. எனவே சரியான கரணங்கள் இல்லாமல் ஒட்டுமொத்தமாக பட்டாசுகளுக்கு தாங்கள் தடை விதித்திருப்பது சரியானதல்ல" என அந்த கடிதத்தில் தெரிவித்திருந்த முதல்வர் ஸ்டாலின், "பட்டாசு விற்பனைக்கு ஒட்டுமொத்தமாக விதித்துள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை தங்களது மாநிலங்களில் அனுமதிக்க வேண்டும்" எனவும் வலியுறுத்தியிருந்தார்.
இந்தநிலையில் தமிழ்நாடு முதல்வரின் கடிதத்தை தொடர்ந்து, ராஜஸ்தான் அரசு பசுமை பட்டாசுகளை வெடிப்பதற்கும், விற்பதற்குமான தடையை நீக்கியுள்ளது. இதுதொடர்பாக ராஜஸ்தான் அரசு, தேசிய தலைநகர் பகுதிக்குள் வரும் இடங்களைத் தவிர்த்து, மற்ற இடங்களில் பசுமை பட்டாசுகளை வெடிக்கலாம் மற்றும் விற்கலாம் என அறிவித்துள்ளது.
மேலும், தீபாவளி, குருபுரப் உள்ளிட்ட பண்டிகைகளின்போது இரவு 8 மணி முதல் 10 மணி வரையும், சாத் பண்டிகையின்போதும் காலை 6 - 8 மணி வரையும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின்போது இரவு 11.55 முதல் 12.30 வரையும் பசுமை பட்டாசுகளை வெடிக்கலாம் என ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தனது கடிதத்தையடுத்து பசுமை பட்டாசுகளுக்கான தடையை நீக்கிய ராஜஸ்தான் முதல்வருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.