
நியூ குளோபல் ப்ரடுயூஸ் இந்தியா நிறுவனத்தின் மீதான செக் மோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
உரத் தயாரிப்பு நிறுவனமான நியூ குளோபல் ப்ரடுயூஸ் இந்தியாவிடமிருந்து எஸ்.கே.என்டா்பிரைசஸ் நிறுவனம் உரம் வாங்கியுள்ளது. உரத்தை சந்தைப்படுத்துவதில் நியூ குளோபல் ப்ரடுயூஸ் நிறுவனம் முறையான ஒத்துழைப்பு வழங்காததால் எஸ்.கே.எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உரத்தைத் திரும்பப்பெற்றுக் கொண்ட நியூ குளோபல் ப்ரடுயூஸ் நிறுவனம், ரூ.30 லட்சத்திற்கான காசோலையை எஸ்.கே.எண்டா்பிரைசஸிடம் வழங்கியுள்ளது. அந்தக் காசோலையை வங்கியில் செலுத்தியபோது வங்கிக் கணக்கில் பணம் இல்லாத காரணத்தால் காசோலை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து எஸ்.கே.என்டா்பிரைசஸ் நிறுவனம், நியூ குளோபல் ப்ரடுயூஸ் இந்தியாவிடம் விளக்கம் கோரியுள்ளது. அவர்கள் தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வராததால், எஸ்.கே.என்டா்பிரைசஸ் பீகாரின் பெகுசராய் நீதிமன்றத்தில் புகாா் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த உர நிறுவனத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி விளம்பரப்படுத்தியதால் அவரது பெயரும் புகாா் மனுவில் சோ்க்கப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை ஜூன் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இருப்பினும், இந்த வழக்கில் ஆஜராக தற்போதுவரை தோனிக்கு சம்மன் அனுப்பப்படவில்லை.