கரோனா பாதித்த நோயாளிகளைப் பட்டாசு புகை பாதிக்கக்கூடும் என்பதால் ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிப்பதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிக முக்கியமான பண்டிகையான தீபாவளி நெருங்கிவரும் நிலையில், இந்த ஆண்டு இப்பண்டிகைக்கான ஆரவாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைவாகவே காணப்படுகிறது. பொருளாதார ரீதியிலும், மனரீதியிலும் கரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கம் காரணமாக இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்கள் குறைவைக்கவே இருந்து வருகின்றன. இந்நிலையில், கரோனா பாதித்த நோயாளிகளைப் பட்டாசு புகை பாதிக்கக்கூடும் என்பதால் ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிப்பதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், "பட்டாசுகளில் இருந்து வெளியேறும் விஷப்புகை காரணமாக கரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள், பொது மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக, மாநிலத்தில் பட்டாசு விற்பனை செய்வதை தடைசெய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், உடற்தகுதிச் சான்றிதழ் இல்லாமல் வாகனங்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.