ராஜஸ்தான் மாநிலம், பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த வாரம் புதன்கிழமை அந்தப் பகுதியில் உள்ள இடத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்படி சென்ற அவர், இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர், சிறுமி எப்போதும் செல்லும் இடங்களில் எல்லாம் தேடிச் சென்றுள்ளனர். ஆனாலும் சிறுமி கிடைக்காததால், கோத்ரா போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி, பில்வாரா பகுதியில் இயங்கி வரும் நிலக்கரி உலை ஒன்றில் ஒரு பெண் உடல் பாதி எரிந்த நிலையில் இருப்பதாக கோத்ரா காவல்நிலையத்திற்குத் தகவல் சென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து கோத்ரா காவல்துறையினர் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று அந்த உடலை மீட்டு எடுத்துள்ளனர். பிறகு சிறுமி காணவில்லை எனப் புகார் கொடுத்த சிறுமியின் பெற்றோரை அழைத்து விசாரித்துள்ளனர். மேலும், மருத்துவப் பரிசோதனை மூலம், இறந்திருப்பது காணாமல் போன அந்தச் சிறுமிதான் எனத் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், சிறுமியின் மீதி உடல் பாகங்கள் அருகே இருந்த குளத்தில் இருந்து போலீஸார் எடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் கோத்ரா காவல்துறையினர் இதுவரை கலு லால்(25), கன்ஹா(21), சஞ்சை குமார்(20) மற்றும் பப்பு(35) ஆகிய நான்கு பேரைக் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் ஒரு சிறுவன் ஈடுபட்டுள்ளதாகவும், அவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தக் குற்றத்தில் மொத்தம் 10 பேர் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது. மேலும், இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட 10 நபர்களில் நான்கு பேர் பெண்கள் எனும் அதிர்ச்சி தகவலையும் கைது செய்யப்பட்ட நான்கு பேர் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட சிறுமியின் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்களைத் தடயவியல் துறையினர் ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர். அந்த ஆய்வின் முடிவில், சிறுமி உயிரோடு இருந்தபோதே அந்த நிலக்கரி உலையில் போடப்பட்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு அந்த நிலக்கரி உலையில் போடப்பட்டு எரிக்கப்பட்டாரா எனும் விபரங்கள் தெரியவரும் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொலைக் குற்றத்தில், சிறுமியின் பெற்றோர் கடந்த புதன்கிழமை கோத்ரா காவல்நிலையத்தை அணுகியபோது, உதவி காவல் ஆய்வாளர் முறையாகச் செயல்படவில்லை எனத் தெரியவந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அந்த உதவி காவல் ஆய்வாளரை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் சிறுமியின் உடலைத் தகனம் செய்தனர். அப்போது சிறுமியின் தந்தை தானும் அந்தத் தீயில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்தார். ஆனால் உடனடியாக அவரை மீட்ட அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் குறித்துக் கேள்வி எழுப்பிய அம்மாநில எதிர்க்கட்சிகள், காங்கிரஸ் ஆட்சியில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்று குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த அந்த மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட், “பில்வாரா சம்பவத்தில் அன்று இரவே 4-5 குற்றவாளிகளைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறை வேறு என்ன செய்ய வேண்டும். குற்றச் சம்பவங்களில் நடவடிக்கை எடுப்பதில் மற்ற மாநிலங்களைவிட நாமே முதல் இடத்தில் உள்ளோம்” என்று தெரித்துள்ளார்.