ராஜஸ்தான் உட்பட ஐந்து மாநிலத்திற்கு இந்த வருட இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாகக் களப்பணி செய்து வருகின்றன. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இன்று காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “நாங்கள் பா.ஜ.க.வுடன் மட்டும் போராடவில்லை. இந்த தேர்தலில் எங்களுக்கு எதிராக பா.ஜ.க.வினர் நான்கு வேட்பாளர்களை முன்னிறுத்தியுள்ளனர். ஒன்று அவர்கள், அடுத்து அமலாக்கத்துறை, மற்றொன்று சி.பி.ஐ, அடுத்தது வருமான வரித்துறையினர். நாங்கள் இவர்களுக்கு எதிராக நின்று வெற்றி பெற வேண்டும். பா.ஜ.க.வினருக்கு தோன்றும் போதெல்லாம் அமலாக்கத்துறையினரையோ அல்லது சி.பி.ஐ.யோ வெளியே விடுகிறார்கள். குறிப்பாக, எங்களுடைய கூட்டம் நடக்கும் போதோ அல்லது கட்சிகளை சார்ந்த நிகழ்ச்சி நடக்கும்போதோ எங்கள் மீது சோதனை நடத்துகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியில் அனைத்து சமூகத்தினரும் இருக்கிறார்கள். ஆனால் பா.ஜ.க யாரையும் அருகில் வரவிடுவதில்லை. புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி திரெளபதி முர்முவை கூட அழைக்கவில்லை. சினிமா துறையை சார்ந்தவர்கள் அழைத்தார்கள். ஆனால், குடியரசுத் தலைவரை ஏன் அழைக்கவில்லை? அவர் இந்த நாட்டினுடைய ஜனாதிபதி. நீங்கள் ஜனாதிபதியை அவமதித்து விட்டீர்கள். புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அஸ்திவாரம் போட்டபோது கூட அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. ஏனென்றால், அவர் உங்கள் பார்வையில் தீண்டத்தகாதவர். ஒரு தீண்டத்தகாதவர் அடித்தளம் அமைத்திருந்தால், அவர்கள் அதை கங்கை நீரின் மூலம் கழுவ வேண்டியிருக்கும்” என்று பேசினார்.