ரயில்வே துறையில் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. பல்வேறு பிரிவுகளின் கீழ் கிட்டத்தட்ட 90ஆயிரம் பணியிடங்களுக்கான இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிய நிலையில், கடந்த மாதம் முதல் ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்தப் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு மட்டுமே. மார்ச் மாத தொடக்கத்திலேயே இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நிறைவடைந்த நிலையில், ஒரு கோடிக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர். எதிர்பார்த்ததை விடவும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், இந்த மாத இறுதிவரை கடைசிதேதியை நீட்டித்து அறிவித்தது ரயில்வே துறை.
இந்நிலையில், தற்போதுவரை கிட்டத்தட்ட 2.5 கோடி பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது 2.41 கோடியை விட அதிகம் என பலர் பகடியாக விமர்சித்து வருகின்றனர். மோடி அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும், அதனால் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மையுமே இதற்குக் காரணம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.