நடந்து முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை வீழ்த்தி, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 538 எலெக்ட்ரோல் வாக்குகளில் 270 வாக்குகள் பெற்றால் வெற்றி எனும் பட்சத்தில், டொனால்ட் டிரம்ப் 295 வாக்குகள் பெற்று அமெரிக்காவின் 47வது அதிபராகிறார். அமெரிக்காவில் இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்பிற்கு, உலக தலைவர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கமலா ஹாரிஸுக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்காக உங்களின் உற்சாக பங்களிப்பிற்கு நான் வாழ்த்த விரும்புகிறேன். உங்களின் நம்பிக்கைச் செய்தி பலரை ஊக்குவிக்கும். ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ், இந்தியாவும் அமெரிக்காவும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்திருந்தது.
ஜனநாயக விழுமியங்களுக்கான நமது அர்ப்பணிப்பு நமது நட்பை தொடர்ந்து வழிநடத்தும். துணை அதிபர் என்ற முறையில், மக்களை ஒன்று சேர்ப்பதற்கும் பொதுவான நிலையைக் கண்டறிவதற்கும் உங்களின் உறுதிப்பாடு நினைவுகூரப்படும். உங்கள் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.