விவசாயிகளால் எதையும் செய்ய முடியாது என்று நினைத்ததால்தான் மத்திய அரசு வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய மூன்று மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த மூன்று மசோதாக்களுக்கும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த புதிய சட்டத்திற்கு நாடு முழுவதும் விவசாயிகள் மத்திய கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்த சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் மூன்று நாட்கள் ட்ராக்டர் பேரணி மேற்கொண்டுள்ளார் ராகுல் காந்தி. இப்பேரணியில் இன்று விவசாயிகள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, "கரோனாவுக்கு இடையில் மூன்று கருப்பு சட்டத்திருத்தங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த நேரத்தில் இதை செய்ய என்ன அவசரம்? விவசாயிகளால் எதையும் செய்ய முடியாது என்று அவர்கள் நினைத்ததால்தான் அவர்கள் அதை செய்தார்கள், ஆனால் ஒரு விவசாயியின் சக்தி என்ன என்பது அவர்களுக்கு தெரியாது" எனத் தெரிவித்துள்ளார்.