ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சரான தரிவால், 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் சட்டமன்றத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “ ராஜஸ்தான் மாநிலம் ஆண்கள் மாநிலமாக உள்ளது. இங்கு ஆண்கள் அதிகமாக உள்ளதால் பெண்களுக்கு எதிரான அதிக பாலியல் வன்கொடுமை நடக்கிறது” என்று கூறினார். அப்போது, சட்டமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதன் பிறகு, “நான் கூறியதற்கு மிகவும் வருந்துகிறேன், நான் பெண்களை மதிக்கிறேன்” என்று அமைச்சர் தரிவால் கூறினார். பெண்களுக்கு எதிரான கருத்துகளை அமைச்சர் பேசியதற்காக அவரை பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க.வினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய அமைச்சரும், மூத்த பா.ஜ.க தலைவருமான கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் அர்ஜூன் ராம் மேக்வால் ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிகானரில் நடைபெற்ற பா.ஜ.க.வின் பரிவர்தன் சங்கல்ப் யாத்திரையில் பங்கேற்றனர். அதன் பிறகு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கஜேந்திர சிங், “ நிச்சயமாக ராஜஸ்தான் ஆண்களின் மாநிலம் தான். ராஜஸ்தானின் ஆண்மையால் தான், இந்து மதமும், சனாதன தர்மமும் இன்னும் இந்தியாவில் உயிர்ப்புடன் இருக்கிறது. பிருத்விரஜ் சவுகான், பாப்பா ராவல், ராணா சங்கா, வீர் துர்காதாஸ், ராவ் சந்திர சென் ஆகியோர் ராஜஸ்தானில் பிறக்காமல் இருந்திருந்தால், இன்று நம் பெயர் வேறு எதாவது இருந்திருக்கும்.
மேலும், ராஜஸ்தான் ஆண்களில் மாநிலம் என்பதால் ராஜஸ்தானில் அதிக பாலியல் வன்கொடுமை நடக்கின்றன என்று அமைச்சர் தரிவால் கூறிய அன்றே ராஜஸ்தான் மாநிலம் அவமதிக்கப்பட்டுள்ளது. அவர் இன்னும் அமைச்சர் பதவியில் இடம்பெற்றிருப்பது பெரும் துரதிஷ்டவசமானது. அவர் தூக்கி எறியப்பட வேண்டும். இன்னும் தெளிவாக கூற வேண்டுமென்றால் அவர் அரபிக்கடலில் தூக்கி எறியப்பட வேண்டும்” என்று கூறினார்.