நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டத் தேர்தலான நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் இன்று (13.05.2024) நடைபெற்று முடிந்தது.
அதன்படி ஆந்திரா - 25 தொகுதிகளுக்கும், தெலங்கானா - 17 தொகுதிகளுக்கும், பீகார் - 5 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் - 4 தொகுதிகளுக்கும், மத்தியப் பிரதேசம் - 8 தொகுதிகளுக்கும், மகாராஷ்டிரா - 11 தொகுதிகளுக்கும், ஒடிசா - 4 தொகுதிகளுக்கும், உத்தரப்பிரதேசம் - 13 தொகுதிகளுக்கும், மேற்குவங்கம் - 8 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீர் 1 தொகுதிக்கும் என 96 மக்களவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தலுடன் ஆந்திராவில் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், ஒடிசாவில் உள்ள 28 பேரவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது.
இதில், உத்தரப் பிரதேச மாநிலம், ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் ஐந்தாம் கட்டமாக மே 20ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான தீவிர தேர்தல் பிரச்சாரத்தில், ராகுல் காந்தி ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், ரேபரேலி தொகுதியில், காங்கிரஸ் சார்பாக நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், ராகுல் காந்தி மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, ‘ராகுல் காந்தியின் திருமணம் எப்போது’ எனக் கூட்டத்தில் இருந்து பலத்த குரல்களுடன் கேள்வி எழுப்பினர். அதற்கு ராகுல் காந்தி சிரித்துக்கொண்டே, ‘நான் விரைவில் திருமணம் செய்து கொள்வேன்’ என்று பதிலளித்து அங்கிருந்து சென்றார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.