![rahul gandhi](http://image.nakkheeran.in/cdn/farfuture/Z2SxcW2ex-upWMQYJ1UueBHn3N-AYCG9YYhzuXFQHZs/1607683554/sites/default/files/inline-images/rg-im.jpg)
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடக்கும் விவசாயிகளின் போராட்டம், 16 வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைகள் பலனளிக்காததால், விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளனர்.
இந்நிலையில் ராகுல் காந்தி, தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு நடத்திய, விவசாயிகளின் வருமானம் பற்றிய ஆய்வின் புள்ளிவிவரங்களைப் பதிவிட்டு மத்திய அரசை விமர்சித்துள்ளார். அந்தப் புள்ளிவிவரங்களின் படி, இந்திய விவசாயிகள், ஆண்டுக்கு சராசரியாக 77 ஆயிரத்து 124 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்கள். பஞ்சாப் மாநில விவசாயிகள் சராசரியாக, நாட்டிலேயே அதிகபட்சமாக 2 லட்சத்து 16 ஆயிரத்து 716 ரூபாய் ஆண்டு வருமானமும், பீகார் மாநில விவசாயிகள், மிகவும் குறைவாக ஆண்டுக்கு, சராசரியாக 42 ஆயிரத்து 684 ரூபாய் வருமானமும் ஈட்டுகிறார்கள்.
இப்புள்ளி விவரத்தை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, நமது நாட்டில், பஞ்சாப் விவசாயிகள்தான் அதிகமாக வருமானம் ஈட்டுகிறார்கள். பீகார் விவசாயிகளின் வருமானம், தேசிய சராசரியை விடக் குறைவாக உள்ளது. விவசாயிகள், தங்கள் வருமானம் பஞ்சாப் மாநில விவசாயிகளின் வருவாயைப் போலவே அதிகமாக இருக்கவேண்டும் என்றே விரும்புவார்கள். ஆனால், மத்திய அரசு, அனைத்து விவசாயிகளின் வருமானமும் பீகார் மாநில விவசாயிகளின் வருமானம் போன்றே இருக்கவேண்டும் என விரும்புகிறது" என மத்திய அரசை விமர்சித்துள்ளார்.