ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், அவந்திபோராவில் கடந்த 2019, பிப்ரவரி 14-ம் தேதி 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி, ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி 78 பேருந்துகளில் சிஆர்பிஎப் படை வீரர்கள் பயணித்து கொண்டிருந்த போது, அவந்திபோராவில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று வீரர்களின் பேருந்து ஒன்றின் மீது மோதியது. இந்த பயங்கர தாக்குதலில் 40 துணை ராணுவப்படையினர் உடல் சிதறி பலியானார்கள்.
இந்த கோர சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு நிறைவுற்ற நிலையில், இந்த சம்பவம் குறித்து ராகுல் காந்தி மூன்று கேள்விகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், "புல்வாமா தாக்குதலில் இருந்து அதிகம் பயனடைந்தவர் யார்? தாக்குதல் தொடர்பான விசாரணையின் நிலை என்ன? இந்த தாக்குதல் நடப்பதற்கான பாதுகாப்பு குறைபாட்டிற்கு பா.ஜ.க அரசில் பொறுப்பேற்க போவது யார்?" என கேள்வியெழுப்பியுள்ளார்.