காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி இன்று காணொளிக்காட்சி வாயிலாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இந்தியாவில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய அவர், "லாக்டவுன் என்பது எந்த வகையிலும் கரோனாவுக்கு தீர்வாகாது. அது ஒரு பாஸ் பட்டன் போன்றது. நாம் ஊரடங்கைத் தளர்த்தியதும், வைரஸ் மீண்டும் பரவும் அபாயம் உள்ளது. இந்தியா ஒரு அவசரக்கால சூழ்நிலையை எட்டியுள்ளது. இந்தியா ஒன்றுபட்டு கரோனாவுக்கு எதிராகப் போராட வேண்டும். நல்ல நிலையில் உள்ள பரிசோதனை கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதே எனது முக்கிய ஆலோசனை. நாம் தரவுகளின் அடிப்படையில் செயல்பட வேண்டும்.
ஊரடங்கு சிக்கலைத் தீர்க்கவில்லை, அது சிக்கலை ஒத்தி மட்டுமே வைத்துள்ளது. கரோனாவுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம், அதிகளவிலான சோதனை மட்டுமே. அதிகளவிலான சோதனைகள் செய்யும்பட்சத்தில் மட்டுமே, வைரஸ் எங்கு நகர்கிறது என்பதை நாம் கண்டறிந்து, அப்பகுதியைத் தனிமைப்படுத்தலாம், இலக்கு வைக்கலாம் மற்றும் அதை எதிர்த்துப் போராடலாம். நமது சோதனை விகிதம் ஒரு மில்லியனில் 199 ஆகும், கடந்த 72 நாட்களில் நாம், ஒரு மாவட்டத்திற்கு, சராசரியாக 350 சோதனைகளை மட்டுமே செய்துள்ளோம்.
வைரஸை எதிர்த்துப் போராட விரும்பினால், நாம் சோதனையை வியத்தகு அளவு அதிகரிக்க வேண்டும். அதிக அளவிலான சோதனைகளை மேற்கொண்டு இந்தியா முழுவதும் கரோனா பரவும் இடங்கள் குறித்த ஒரு வரைபடத்தைத் தயார்ப்படுத்த வேண்டும். நான் நரேந்திர மோடியுடன் நிறைய விஷயங்களில் ஒத்துப்போவதில்லை. ஆனால் இது சண்டைக்கான நேரம் இல்லை. நாம் ஒன்றுபட்டு வைரஸை எதிர்த்துப் போராடு வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.