![Rahul Gandhi](http://image.nakkheeran.in/cdn/farfuture/40cmL9JdAiKJWYbWWqCuTTwoCE6Crcoc1RHHgYAcPCo/1601702322/sites/default/files/inline-images/aq31.jpg)
ஹாத்ராஸிற்கு மீண்டும் செல்ல ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் முடிவு செய்திருப்பதால் உத்தரபிரதேச மாநிலம் மீண்டும் பதட்டமாகியிருக்கிறது.
உ.பி.மாநிலம் ஹாத்ராஸை சேர்ந்த இளம்பெண் பாலியல் கூட்டு வன்புணர்வால் மரணமடைந்தார். இந்த சம்பவம் தேசம் முழுவதும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை பாதுகாப்பதாக உத்தரபிரதேச பாஜக அரசுக்கு எதிராகவும், மத்திய மோடி அரசை கண்டுத்தும் காங்கிரஸ், திரினாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்பட பல்வேறு பெண்ணிய அமைப்புகளும் போராடி வருகின்றன.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்லவும், அவர்களுக்கு நீதி கேட்டும் ஹாத்ராஸ் செல்ல ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் உ.பி.க்கு நேற்று வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்து முயற்சியில் அவர்களிடம் கண்மூடித்தனமாக நடந்துகொண்டது உ.பி. போலீஸ். இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ராகுல்காந்தி இடித்தள்ளப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை உருவாக்கியது. ராகுலும், பிரியங்காவும் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் காங்கிரஸ் தலைவர்கள். இந்த நிலையில், மீண்டும் உத்தரபிரதேசம் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திப்போம் என ராகுல்காந்தியும், பிரியங்காவும் முடிவு செய்திருக்கிறார்கள். இன்று அவர்கள் ஹாத்ராஸ் செல்வதாக அறிவிப்பு செய்துள்ளது காங்கிரஸ் மேலிடம்.