நீட் தோ்வு வேண்டாம் என்று குரல் கொடுக்கும் முக்கிய மாநிலங்களில் ஒன்று கேரளா. அங்கு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அதிகம். இதில் வயநாடு மாவட்டம் கல்ப்பற்ற பகுதியை சோ்ந்த ஆமினா, நீட் தோ்வில் வெற்றி பெற்றாறர். சிறு வயதில் விபத்து ஒன்றில் இடது கையை இழந்த ஆமினா எதிர் காலத்தில் டாக்டராக வேண்டுமென்ற ஆசை நிறைவேறியதையடுத்து உற்சாகமடைந்தார்.
இந்த நிலையில் அந்த பகுதியை சோ்ந்த காங்கிரஸ் பிரமுகர் சலிமிடம் எனக்கு இன்னொரு ஆசை ராகுல் காந்தியை மட்டும் சந்திக்க வேண்டுமென்று கூறியுள்ளார். ராகுல் காந்தி அந்த வயநாடு தொகுதி எம்.பி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக வயநாடு தொகுதியில் சுற்றுபயணம் மேற்கொண்டிருந்த ராகுல் காந்தியிடம் சோனியாகாந்தியின் ஆலோசகரும் மேல்சபை எம்.பி.யுமான வேணுகோபால் மூலம் ஆமினாவின் ஆசையை கூறினார்கள்.
இதனையடுத்து தன்னுடைய நிகழ்ச்சிகளுக்கிடையில் ஆமினாவை சந்திக்க சம்மதித்தார் ராகுல். கல்ப்பற்ற விருந்தினா் மாளிகையில் ஆமினாவை சந்தித்த ராகுல் காந்தி அவரை கட்டி அணைத்து வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து 15 நிமிடம் பேசினார். அப்போது ராகுல் காந்தி, உன்னை போன்ற மாற்றுதிறனாளிகள் மருத்துவ துறையில் மட்டுமல்ல எல்லாம் துறைகளிலும் சாதிக்க வேண்டும். அதற்கான திட்டங்களையும் இட ஒதுக்கீடுகளையும் அதிகரிக்க எதிர்காலத்தில் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும் என்றார்.
பின்னா் கூறிய ஆமினா, படுத்த படுக்கையாக கிடக்கும் உடல்நிலை சரியில்லாத அப்பாவை நான் தான் கவனிக்க வேண்டிய நிலை. குடும்பத்தை காப்பாற்றுவதற்காக அம்மா வெளிநாட்டில் வீட்டு வேலை செய்து வருகிறார். அப்பாவையும் தம்பியையும் கவனித்து படித்து வந்தேன். இப்போது என்னுடைய ஆசையும் நிறைவேறிவிட்டது என்றார்.