மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இதனை கட்சி உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், ராகுலிடம் இந்த முடிவை திரும்ப பெறுமாறு பல முறை பேச்சுவார்த்தையும் நடந்தது. ஆனாலும் தன் முடிவிலிருந்து பின்வாங்காத ராகுல், பதவி விலகுவதில் உறுதியாக இருப்பதாகவும், புதிய தலைவரை கட்சியின் உயர்மட்ட குழுவே தேர்ந்தெடுக்கும் எனவும் கூறினார்.
இந்த நிலையில் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள யாரும் முன்வராத நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள மூத்த தலைவர்கள் தயங்கும் நிலையில், மீண்டும் ராகுல் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸின் இரண்டாம்கட்ட தலைவர்களான ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ப,சிதம்பரம், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரிடம் தலைவர் பொறுப்பை ஏற்க பேசப்பட்ட நிலையில் அவர்கள் யாரும் ஒப்புக்கொள்ளாத நிலையில் தற்போது ராகுல் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
மகாராஷ்டிரா, ஹரியாணா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், ராகுல் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. தலைவர் பதவியில் தொடர முடிவு செய்துள்ள ராகுலின் எதிர்காலத் திட்டங்கள் கட்சியினருக்கு மிகவும் கடுமையானதாக அமையும் எனவும், கட்சி அமைப்புகள் சீர்திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு, பல புதிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.