சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியிலும், கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். அந்த தேர்தலில், அந்த இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றார். இரண்டு தொகுதியிலும் வெற்றி பெறும் பட்சத்தில், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி, அவர் ஏற்கெனவே வகித்து வந்த வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, வயநாடு தொகுதியில், வரும் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, வயநாடு தொகுதி இடைத்தேர்தல் வரும் நவம்பர் 13-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பாக பிரியங்கா காந்தி போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சத்யன் மோக்கேரி மற்றும் பா.ஜ.க வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். முதல் முறையாக தேர்தல் அரசியலில் குதித்திருக்கும் பிரியங்கா காந்தி, வயநாடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்போடு சூறாவளி பிரச்சாரம் செய்திருந்தார்.
இந்த நிலையில், வயநாட்டில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடையவுள்ளது. அதனால், இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதற்காக காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இன்று வாகண பேரணி நடத்தினர். வாகனத்தில் பயணித்தபடியே, இருவரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதில், குறிப்பாக, எந்தவொரு எழுத்துக்களும் இல்லாத வெள்ளை நிற டி-ஷர்ட் மட்டுமே அணிந்து வரும் ராகுல் காந்தி, இந்த முறை, ‘ஐ லவ் வயநாடு’ என்று குறிப்பிட்ட வெள்ளை நிற டி-ஷர்ட்டை அணிந்து வந்துள்ளார். இது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.