Skip to main content

சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் நடத்தப்பட வேண்டும்?; விளக்கும் ராகுல் காந்தி

Published on 10/10/2023 | Edited on 10/10/2023

 

Rahul Gandhi Explained  Why caste wise census should be conducted?;

 

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம்  நேற்று (09-10-23) நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கர்நாடாக முதல்வர் சித்தராமையா, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் மற்றும் இமாச்சல் பிரதேசம் முதல்வர் சுக்விந்தர் சுகு ஆகியோர் கலந்துகொண்டனர். 

 

இந்தச் செயற்குழுக் கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, “சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் கமிட்டி ஒருமனதாக ஆதரிக்கிறது. இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் வலியுறுத்துகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்துகின்றன. காங்கிரஸ் ஆளும் நான்கு மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் விவரங்களை வெளியிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது அரசியல் அல்ல; அது நீதியின் அடிப்படையிலான கோரிக்கை. பா.ஜ.க.வால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாவிட்டால், அக்கட்சி ஆட்சியில் இருந்து விலகட்டும். 

 

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதில் பிரதமர் மோடி பயந்து போய் மக்களை திசைதிருப்ப முயற்சி செய்கிறார். பா.ஜ.க. ஆளும் 10 மாநில முதல்வர்களில் ஒரே ஒருவர் தான் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை (ஓ.பி.சி.) சேர்ந்தவர். ஆனால், காங்கிரஸ் ஆளும் நான்கு மாநிலங்களின் முதல்வர்களில் மூன்று பேர் ஓ.பி.சி. வகுப்பைச் சேர்ந்தவர்கள். பிரதமர் மோடி, இதர பிற்படுத்தப்பட்ட (ஓ.பி.சி.) மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. நாங்கள் மதம், சாதியை வைத்து மக்களை பிரிக்க முயற்சிக்கவில்லை. அவர்களின் உரிமைகளைப் பெற முயற்சிக்கிறோம்” என்று பேசினார்.

 

அப்போது திடீரென்று செய்தியாளர்களை நோக்கி, உங்களில் எத்தனை பேர் பட்டியல் சாதியினர் இருக்கிறீர்கள்? என்று ராகுல் காந்தி கேட்டார். அதற்கு யாரும் கை தூக்கவில்லை. இதனையடுத்து, உங்களின் எத்தனை பேர் பழங்குடியினர்? எனக் கேட்டார். அப்போது யாரும் கை தூக்கவில்லை. உங்களில் எத்தனை பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்? என்று கேட்டார். அதற்கும் யாரும் கை தூக்கவில்லை. அப்போது ராகுல் காந்தி,” நமது நாட்டின் நிலை இது தான். இதற்காகத் தான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்கிறோம்” என்று கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்