காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, 'இந்திய ஒற்றுமை பயணம்' என்ற நடைப்பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி ஸ்ரீநகர் வரை மொத்தம் 135 நாட்கள், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,750 கிலோமீட்டர் கடந்து முடித்தார். இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி ‘பாரத் நீதி யாத்திரை’ (மக்கள் சந்திப்பு பயணம்) எனும் பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாம் கட்ட நடைப்பயணத்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்படி, கடந்த 14ஆம் தேதி ராகுல் காந்தியின் யாத்திரை தொடங்கியது. மேலும், மணிப்பூரில் இருந்து மும்பை வரை இந்த யாத்திரையை மேற்கொண்டு மார்ச் 20 ஆம் தேதி வரை நடக்கவுள்ளதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், அசாம், மேற்கு வங்கம், சட்டீஸ்கர், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 15 மாநிலங்களில் 110 மாவட்டங்கள் 100 மக்களவைத் தொகுதிகள் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அசாம் மாநிலம் சிவசாகர் மாவட்டத்தில் நேற்று (18-01-24) யாத்திரையை மேற்கொண்ட ராகுல் காந்தி, பா.ஜ.க அரசை கடுமையாக சாடியிருந்தார். இது குறித்து அவர் பேசியதாவது, “இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக அசாம் அரசு உள்ளது. அசாமில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த முதல்வர் அசாம் முதல்வர் ஹிமந்த சர்மா தான் என்று நாம் அனைவரும் அறிந்ததே. அவர் விலை கொடுத்து வாங்கப்பட்டது போல், தனது ஊழல் பணத்தால் அசாம் மக்களை விலை கொடுத்து வாங்கலாம் என்று நினைக்கிறார். ஆனால், அசாம் மக்கள் விலைபோக மாட்டார்கள். அவர்களுக்கு எந்த விலையையும் கொடுக்க முடியாது.
மணிப்பூரில் ஒரு சிவில் போர் போன்ற சூழல்தான் நிலவுகிறது. மாநிலம் முழுவதும் பிளவுப்படுத்தப்பட்டு இன்னும் அமைதி திரும்பவில்லை. ஆனால், பிரதமர் மோடி இதுவரை அங்கே செல்லவில்லை. பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸும் இணைந்து நாட்டில் வெறுப்பை பரப்பி வருகின்றன. ஒரு பிரிவினரை மற்றொரு பிரிவினருக்கு எதிராக போராட வைக்கின்றன. பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்து, நாட்டை சுரண்டுவது தான் இவர்களுடைய வேலை. இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மணிப்பூரில் தொடங்கினோம். மராட்டியம் வரை இது தொடரும். இந்தியாவின் அனைத்து சாதி, மதம் மற்றும் மொழியினரை இணைப்பது மட்டுமின்றி, நீதி வழங்குவதே இந்த யாத்திரையின் நோக்கம்” என்று பேசினார்.