நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டத் தேர்தலான நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (13.05.2024) நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து, மே 20ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், உத்தரப் பிரதேசம் மாநிலம், ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். ரேபரேலி தொகுதியில் ஐந்தாம் கட்டமாக மே 20ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ராகுல் காந்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், அங்கு நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று (13-05-24) கலை லக்னோ விமான நிலையத்துக்கு வருகை தந்தார்.
அப்போது, விமானத்திலும், விமான நிலையத்திலும் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, “இன்று நான் லக்னோ விமான நிலையத்தில் இருந்தேன். இங்கிருந்து மும்பை, கவுகாத்தியில் இருந்து அகமதாபாத் வரை அனைத்து விமான நிலையங்களையும் தனது ‘டெம்போ நண்பரிடம்’ ஒப்படைத்துள்ளார் பிரதமர். நாட்டின் சொத்துக்கள் எத்தனை டெம்போக்களுக்கு விற்கப்பட்டன என்பதை நரேந்திர மோடி பொதுமக்களிடம் சொல்வாரா?
2020 மற்றும் 2021 க்கு இடையில், வரி செலுத்துவோர் பணத்தில் கட்டப்பட்ட இது போன்ற ஏழு விமான நிலையங்கள் 50 ஆண்டுகளாக கௌதம் அதானியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதற்கு எத்தனை டெம்போக்கள் எடுத்தது என்று சொல்லுங்கள். இந்த விசாரணையை எப்போது தொடங்குவீர்கள்? அதானியும், அம்பானியும் கறுப்புப் பணம் தருகிறார்கள் என்று ஐந்தாறு நாட்களுக்கு முன்பே சொல்லியிருக்கிறீர்கள். அமலாக்கத்துறையையும் சி.பி.ஐயையும் அனுப்புங்கள்” என்று தெரிவித்துள்ளார். மேலும், விமான நிலையத்தில் இருந்த அதானி பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனத்தின் விளம்பரப் பதாகைகளை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி விமர்சித்து பேசியிருந்தார்.