ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரித்துள்ளன. ரஷ்யாவும் தலிபான்களை அங்கீகரிக்கும் என கருதப்படுகிறது. இந்தநிலையில், ஆப்கானிஸ்தான் நிலை தொடர்பாக பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் நேற்று (24.08.2021) தொலைபேசியில் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையின்போது, தலிபான்கள் ஆட்சி செய்யும் நடைமுறையில் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆய்வுசெய்த பிறகு, அவர்களை அங்கீகரிப்பது குறித்து முடிவெடுக்க இந்தியாவும் ரஷ்யாவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஆப்கானிஸ்தான் நிலையை ஆய்வுசெய்ய இருநாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகளும், தேசிய பாதுகாப்பு அதிகாரிகளும் அடங்கிய குழுவை அமைக்க பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் முடிவெடுத்துள்ளதாகவும், அந்தக் குழுவின் ஆய்வின் அடிப்படையில் ஆப்கன் அரசுடனான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இரு நாடுகளும் முடிவு செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.