உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநிலத்தின் முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் இருந்துவந்த நிலையில், உட்கட்சி பூசலால் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திராத் சிங் ராவத் உத்தரகண்ட் மாநில முதல்வராக்கப்பட்டார்.
இந்தநிலையில், முதல்வராக பதவியேற்ற திராத் சிங் ராவத், நான்கே மாதங்களுக்குள் தனது முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். சட்டமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவர், முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தலில் நின்று வெல்ல வேண்டும். அதன்படி திராத் சிங் ராவத், செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் உத்தரகண்ட் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் உத்தரகண்டில் ஒரு வருடத்திற்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதாலும், கரோனா பரவலாலும் அங்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவாக இருந்தது.
இதனையடுத்து திராத் சிங் ராவத் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து இன்று காதிமாவைச் தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.வான புஷ்கர் சிங் தாமி உத்தரகண்டின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. புஷ்கர் சிங் தாமி முதல்வராக தேர்தெடுக்கப்பட்டதன் மூலம், நான்கு மாதங்களில் இரண்டாவது புதிய முதல்வரை உத்தரகண்ட் கண்டுள்ளது.