பிரதம மந்திரியின் 'இலவச அரிசி வழங்கும்' திட்டத்தின் கீழ், புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கதிர்காமம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. தயவுசெய்து அனைவரும் கரோனா நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவும். என்னைப் பார்த்து மாஸ்க் அணிய வேண்டாம், கரோனாவைத் தடுக்க மாஸ்க் அணிய வேண்டும். மக்கள் கட்டுப்பாட்டோடு இருந்தால் கரோனா கட்டுப்பாடாக இருக்கும். 29-ல் இருந்து 40 வயது உள்ளவர்களை கரோனா தாக்குகிறது. அதனால் எச்சரிக்கையுடன் இருக்கவும். முதல்வருடன் மக்கள் நலன் வேண்டி இனக்கமாகச் செயல்பாடுகள் இருக்கும். நாள்தோறும் மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கு மட்டுமே கரோனாவைக் கட்டுப்படுத்தும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது. ஆகவே மக்கள் சுயக் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். மக்கள் கட்டுப்பாடுடன் இல்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கையாக முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். நோய்த் தொற்று அதிகரித்து பின்பு மருத்துவமனை வருவதால் நோய்த் தொற்றால் பாதித்த முதியவர்களின் இறப்பு விகிதம் தற்போது அதிகரித்து வருகிறது" என்றார்.