பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஆட்சியில் இருக்கிறது. கரோனா தடுப்பூசிகள் மாநிலம் முழுவதும் மக்களுக்குப் போடப்பட்டுவருகிறது. இந்த நிலையில், கரோனா பாதிப்படைந்த குழந்தைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது என்றும், தனியார் மருத்துவமனைகளுக்குத் தடுப்பூசிகளை முறைகேடாக விற்கப்படுவதாகவும் குற்றம்சாட்டிவருகிறது பஞ்சாப் மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான சினோன்மணி அகாலிதளம்.
இந்த ஊழல்களை சி.பி.ஐ. விசாரிக்கவும், ஊழல்களுக்கு காரணமான சுகாதாரத்துறை அமைச்சர் பல்பிர்சிங் சித்து மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி பஞ்சாபில் மிக பிரம்மாண்டமான பேரணியை நடத்தியது சிரோன்மணி அகாலிதளம். கட்சியின் தலைவர் சுக்பீர்சிங் பாதல் தலைமையில் அக்கட்சி தொண்டர்கள் ஏராளமாக திரண்டனர்.
முதல்வர் அமரீந்தர் சிங், அமைச்சர் பல்பிர்சிங் சித்து ஆகியோருக்கு எதிராக முழக்கமிட்டவாறே முதல்வரின் இல்லத்தை முற்றுகையிட முயன்றது பேரணி. அதனை தடுத்து நிறுத்த முயற்சித்தது மாநிலக் காவல்துறை. கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டதால் பேரணியைக் கலைக்க தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இதனால், பேரணி கலைந்த நிலையில், எங்கு பார்த்தாலும் கூச்சலும் ரகளையுமாக இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதலை கைது செய்து வீட்டுச் சிறையில் முடக்கியிருக்கிறது காவல்துறை. தங்கள் தலைவரை வீட்டுக் காவலில் வைத்திருப்பதைக் கண்டித்துப் போராடிவருகின்றனர் சிரோன்மணி அகாலிதள கட்சியினர். இதனால் பஞ்சாப் முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்கிறது.