அமலாக்கத்துறையை பயன்படுத்தி எம்.எல்.ஏக்களை மிரட்டுகிறது பாஜக என மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெங்களூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ஜனநாயகத்தையே பாஜக கேலிக் கூத்தாக்கிக் கொண்டிருக்கிறது. அரசியல் சாசனத்தை மீறி ஆளுநர் செயல்பட்டு கொண்டிருக்கிறார். காங்கிரஸ் - ம.ஜ.த எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி செய்து வருகிறது.
எம்.எல்.ஏக்களுக்கு பாஜக அரசு நெருக்கடி கொடுக்கிறது. அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகளைப் பயன்படுத்தி எம்.எல்.ஏக்களை மிரட்டுவது பாஜகவின் வாடிக்கையாக உள்ளது.
பாஜகவுக்கு எதிராக மாநில கட்சிகளின் தலைவர்களை ஒன்றிணைக்க உள்ளோம். ஜனநாயகத்தைப் பாதுகாக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று திரள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.