கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் ராணுவ வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் தனியார் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில், “மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்களின் மீதான தாக்குதல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறமையின்மையின் காரணமாகவே ஏற்பட்டது. அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் ராஜ்நாத் சிங். ராணுவ வீரர்களை அழைத்துச் செல்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து விமானம் கேட்கப்பட்டது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் விமானத்தை தர மறுத்து சாலைமார்க்கமாக செல்லும்படி உத்தரவிட்டது. இதன் காரணமாகவே சிஆர்பிஎஃப் வீரர்கள் சாலைமார்க்கமாக சென்றார்கள்.
சாலைமார்க்கமாக அவர்கள் சென்ற போதும் அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் திறம்படச் செய்யப்படவில்லை. அன்று மாலையே பிரதமரிடம் இது குறித்து கூறினேன். ‘இது நம் தவறு. விமானம் வழங்கப்பட்டு இருந்தால் இது நடந்திருக்காது’ என்று தெரிவித்தேன். ஆனால், பிரதமர் ‘இது குறித்து வெளியில் யாரிடமும் கூற வேண்டாம்’ என்றும் அமைதியாக இருக்கும்படியும் கூறினார். தேசிய பாதுகாப்பு செயலாளரும் அமைதியாக இருக்கும்படியே கூறினார். வெடிமருந்துகளுடன் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வந்த வாகனம் 10 முதல் 12 நாட்கள் சுற்றித் திரிந்ததை உளவுத்துறையினர் சரிவர கவனிக்கவில்லை. இது உளவுத்துறையினர் தோல்வி” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவண் கேரா கருத்து தெரிவிக்கையில், "தலைப்புச் செய்திகளை கையாளுவதன் மூலம் அரசுக்கு எதிரான கேள்விகளை புறந்தள்ளுகின்றனர். இதன் மூலம் கேள்விகள் மட்டுமே அதிகரிக்கின்றன. சீனாவுக்கு ஏன் நியாயவாதி அந்தஸ்து. அதானி மீது ஏன் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை இல்லை. அதானியின் போலி நிறுவனங்களில் 20 ஆயிரம் கோடிகள் எங்கிருந்து வந்தன. புல்வாமா தாக்குதல் பற்றிய குற்றச்சாட்டுக்கு ஏன் பதில் இல்லை" என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.