Skip to main content

காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் கோபமும், மோடியின் சமாதானமும்?

Published on 14/08/2019 | Edited on 14/08/2019

“காஷ்மீரை இரண்டாக பிரித்தது மட்டுமின்றி, சீனாவின கையில் உள்ள காஷ்மீர் பகுதியையும், பாகிஸ்தான் கையில் உள்ள காஷ்மீர் பகுதியையும் விரைவில் இந்தியாவுடன் இணைப்போம்” என்று நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசினார் அமித் ஷா.
 

jai

 

 

உடனே, சில மூத்த பத்திரிகையாளர்கள் முதலில் இரண்டாக பிரித்த காஷ்மீரில் தேர்தல் நடத்த முடியுமா? மக்களுடை இயல்பு வாழ்க்கையை திரும்பக் கொண்டு வரமுடியுமா? என்பதற்கான நடவடிக்கைகளை அமித் ஷா எப்போது முடிக்கப் போகிறார் என்ற கேள்வியை எழுப்பினார்கள்.
 

ஆனால், சீனாவை சமாதானப்படுத்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை மோடி அனுப்பி, சீனாவுடன் இந்தியா மோதாது. சீன ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இந்தியா உரிமை கொண்டாடாது என்று உறுதி அளித்திருக்கிறார். பாஜகவின் பாணியே இதுதான். சீனாவிடம் இந்தியா மண்டியிட்டது வெளியே வராது. ஆனால், சீனா ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரையும் மீட்கப்போவதாக அமித் ஷா பேசியதையே பிரச்சாரம் செய்வார்கள். அது நடக்காது என்பது உலகிற்கே தெரியும் என்றாலும், அந்தப் பொய்யை தொடர்ந்து சொல்வார்கள் என்கிறார்கள்.
 

மூத்த பத்திரிகையாளர்களின் வாதத்தில் ஒரு நியாயம் இருக்கிறது. காஷ்மீர் மக்கள் விருப்பத்தின் பேரில் அந்த மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை பறித்து, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததாக அமித் ஷாவும் மோடியும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மக்களை தெருவில் நடமாடவிடாமல், ஒரு லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை காஷ்மீர் தெருக்களில் நடமாடவிட்டிருக்கிறார்கள். மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டிருக்கிறார்கள். பள்ளி, கல்லூரிகளை மூடி வைத்திருக்கிறார்கள்.
 

எல்லாவற்றுக்கும் மேலாக தகவல் தொடர்பு வசதிகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. மீடியாக்களின் குரல்வளை நெறிக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீரில் என்ன நடக்கிறது என்ற உண்மையை உலகிற்கு சொல்ல மத்திய அரசு தடைவிதிக்கிறது. காஷ்மீர் மக்களின் தலைவரைகளை எங்கு சிறை வைத்திருக்கிறது என்பதைத் தெரிவிக்க மறுக்கும் மத்திய அரசு, நாட்டின் மிக முக்கிய அரசியல்கட்சிகளின் தலைவர்களைக் கூட காஷ்மீர் செல்ல அனுமதி மறுக்கிறது.
 

இது நெருக்கடிநிலையைப் போல இருக்கிறது. காஷ்மீரில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் போல எல்லோரும் சொல்கிறார்கள். நெருக்கடிநிலைக் கால இந்தியாவை நேரில் பார்த்து அனுபவித்திருக்கிறோம். அந்தக் காலகட்டத்தில் வானொலி மட்டும்தான் இருந்தது. அதுவும் அரசு பொறுப்பில் மட்டுமே இருந்தது. பத்திரிகைகளை தணிக்கை செய்து அரசு எதிர்ப்பு செய்திகளை தடுத்தார்கள்.
 

ஆனால், மக்கள் நடமாட்டமோ, இல்ல நிகழ்ச்சிகளோ, அவற்றில் அரசியல் தலைவர்கள் பங்கேற்போ தடுக்கப்படவில்லை. அரங்கக் கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்பட்டன. செய்தித்தாள்கள் வெளிவந்தன. அந்தச் செய்தித் தாள்களில் மறைமுகமாக நாட்டு நடப்புகள் வெளிவரத்தான் செய்தன.
 

ஆனால், காஷ்மீரில் என்ன நடக்கிறது என்று வெளியுலகுக்குத் தெரியவே இல்லை. சீனாவுக்கு உட்பட்ட ஹாங்காங்கில் நடக்கும் போராட்டம் உலகம் முழுவதும் பரபரப்பாக காட்டப்படுகின்றன. வெனிசூலாவில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் உலகம் முழுவதும் தெரிகிறது. ஆனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில் காஷ்மீர் குறித்த செய்திகள் வெளிவருவதை தடை செய்திருக்கிறது மத்திய அரசு.
 

ஜெர்மனியில் ஹிட்லர் செய்த இனப்படுகொலை மிக ரகசியமாகவே நடைபெற்றது. ராணுவத்தை கையில் வைத்து, காஷ்மீரிகளுக்கு சொந்தமான நிலத்தை அம்பானி குழுமத்திற்கு விற்பனை செய்ய மோடி அரசு திட்டமிடுவதாக ஒருபக்கம் செய்திகள் உலா வருகின்றன. மோடியோ, காஷ்மீரில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு சினிமாக்களை சுதந்திரமாக எடுக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
 

எல்லைப் பகுதியில் நடக்கும் மோதல்களைக்கூட மத்திய அரசு மக்களுக்கு சொல்லாமல் தவிர்க்கிறது என்றும் கூறப்படுகிறது. காஷ்மீரில் மக்களை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்திருந்தால், எத்தனை நாட்கள் அவர்கள் உயிர் வாழ முடியும்? ராணுவத்தை வைத்து மிரட்டித்தான் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தார் படேல். இப்போதும் ராணுவத்தை வைத்து மிரட்டியே காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை பறித்து, மக்களை வீட்டுச் சிறைக்குள் அடைத்திருக்கிறார் மோடி.
 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற அந்தஸ்த்தை விரைவில் இழக்கப் போகிறது இந்தியா என்று அரசியல் பார்வையாளர்கள் கணிப்பது நடந்து விடுமோ என்று அச்சமாக இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்