டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் அமைப்பின் ஆட்சிமன்றக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 4-வது நிர்வாக குழு கூட்டம் இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துதல், ஆயுஷ்மன் பாரத், தேசிய ஊட்டச்சத்து திட்டம், இந்திரா தனுஷ் போன்ற மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
மேலும் மாவட்டங்களின் மேம்பாடு, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தின கொண்டாட்டம் போன்றவையும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், முக்கிய துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
நிதி ஆயோக் கூட்டம் இன்று காலை 10 மணி முதல் மாலை வரை நடைபெறுகிறது. 2 அமர்வுகளாக இந்த கூட்டம் நடைபெற இருப்பதாகவும், கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்களையும் பிரதமர் மோடி தனித்தனியாக சந்திக்க இருப்பதாகவும் தெரிகிறது.
புதிய இந்தியா 2022ற்கான வளர்ச்சி திட்டமும் இந்த கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் தம்பிதுரை தலைமையிலான அதிமுக எம்பிக்கள் முதல்வர் பழனிசாமியை வரவேற்றனர்.