
மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் உடல்நலமின்றி சிகிச்சை பெற்றுவரும் புதுச்சேரி இளைஞர் இந்தியாவுக்குத் திரும்ப மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மக்கள் உரிமை கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
"புதுச்சேரி பாகூர் கொம்யூன் அதிங்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் அகிலன்(22). இவர் மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 15.07.2020 அன்று அகிலன் உடல்நிலை சரியில்லாமல் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவருடன் வேலை செய்யும் ஒருவர் அவரது பெற்றோருக்குத் தகவல் கூறியுள்ளார். மேற்கொண்டு இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் பெற்றோருக்குத் தெரிவிக்கப்படவில்லை. அதையடுத்து அகிலன் இந்தியாவுக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவரது பெற்றோர் கோரி வருகின்றனர். இதுதொடர்பாக துணைநிலை ஆளுநர், முதல்வர், பாராளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து கடந்த 24.07.2020 அன்று முதல்வர் நாராயணசாமி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், இதுவரையில் அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அகிலனின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அவரது பெற்றோர் அச்சப்படுகின்றனர். எனவே, புதுச்சேரி இளைஞர் அகிலன் மலேசியாவில் இருந்து இந்தியாவுக்குத் திரும்ப மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் காலம் தாழ்த்தாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.
இதுகுறித்து பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், வெளியுறவுத் துறைச் செயலர், உள்துறைச் செயலர் ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளோம்".எனக் குறிப்பிட்டுள்ளார். இதுபோல் அகிலனின் பெற்றோரும் அவரை ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.