இண்டிகோ விமானத்தில் அவசரக் கால கதவைத் திறந்ததாக ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி சென்னையிலிருந்து திருச்சி சென்ற இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தார். அப்போது அவர் விமானத்தின் அவசரக் கால கதவைத் திறந்துவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலத்த கண்டங்களைத் தெரிவித்தன. ஆனால் பாஜக சார்பில் அவசரக் கால கதவைத் தவறுதலாகத் திறந்துவிட்டார். உடனடியாக மன்னிப்பும் கேட்டுவிட்டார் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று நாக்பூரிலிருந்து மும்பைக்கு இண்டிகோ 6E 5274 என்ற விமானம் சென்று கொண்டிருந்தது. விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கும் நேரத்தில் அதில் பயணம் செய்த பயணி ஒருவர் விமானத்தின் அவசர கதவைத் திறக்க முயன்றுள்ளார்.
இது தொடர்பாக விமானத்தில் பணி செய்யும் ஊழியர்கள் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து விமானத்தின் கதவைத் திறந்த நபர் மீது ஐபிசி 336 ஆவது பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் இது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் விமானத்தைப் பாதுகாப்பாக இயக்குவதில் எந்த சமரசமும் கிடையாது என விளக்கம் அளித்துள்ளது.