புதுச்சேரியைச் சேர்ந்த கண்ணன் - நோயலின் என்ற தம்பதியரின் மகன் அபிலேஷ். இவர் கணினி பொறியியல் பாடத்தில் பட்டம் பெற்றவர். அபிலேஷின் தந்தை இந்து, தாய் கிறிஸ்தவர். அபிலேஷ் தற்போது நெதர்லாந்து நாட்டில் கணினி பொறியாளராக வேலை செய்து வருகிறார். இவர் பணிபுரியும் இடத்தில் அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் பாத்திமா அப்பி என்பவரும் பணிபுரிந்து வருகிறார். முதலில் நண்பர்களாக பழகி உள்ளனர். பின்னர் இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர்.
இந்நிலையில் தங்கள் காதலை அபிலேஷும் பாத்திமாவும் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இவர்களின் காதலை இரு வீட்டாரும் ஏற்றுக்கொண்டனர். மேலும் சாதி, மதங்களைக் கடந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் உறுதி எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து தங்களது திருமணமானது இருவீட்டார் சம்மதத்துடன் வள்ளலார் உருவாக்கிய சன்மார்க்க நெறிப்படி திருமணம் செய்துகொள்ள இருவரும் முடிவு செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து புதுச்சேரி வந்த இவர்கள் திருக்குறளின் மீதும், வள்ளலாரின் திருமுறையின் மீதும் உறுதியேற்று திருமணம் செய்துகொண்டனர். இந்தத் திருமணம் வள்ளலார் சன்மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவர்களின் இந்தத் திருமணம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.