காரைக்காலில் மறைந்த சாராயத் தொழிலதிபர் ராமு என்கிற ராதாகிருஷ்ணனின் வீட்டில் நேற்று (12.12.2019) கூலிபடையை சேர்ந்த மூன்று பேர் கையில் அரிவாளுடன் கைது செய்யபட்டிருப்பது காரைக்காலில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மதுக்கடத்தல் மற்றும் சாராய தொழிலில் அசைக்க முடியாத சக்தியாவும், பல்வேறு தொழில்களுக்கு அதிபராகவும், இருந்த ராமுவை காரைக்காலில் உள்ள பிரதான சாலையிலேயே கொலை செய்தது ஒரு கும்பல், அதற்கு பழிக்கு பழியாக அவரது இரண்டாவது மனைவி எழிலரசி கணவரை கொன்றவர்களை விரட்டி, விரட்டி பழிதீர்த்தார், அதில் ராமுவின் மூத்த மனைவி வினோதா, முன்னாள் சபாநாயகராக இருந்த சிவக்குமாரும் தப்பவில்லை.
ராமுவின் மூத்த மனைவிக்கு பிறந்த மகன் அஜேஸ்ராம் வெள்ளாந்தெருவில் உள்ள தனது வீட்டில் தனது தாத்தா செல்வராஜ், அவரது சித்தி பிரீத்தா மற்றும் தம்பி மாதேஸ்ராமோடு வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று 12- ஆம் தேதி தனது வீட்டில் ராமுவின் இரண்டாவது மனைவி எழிலரசியை கொலை செய்ய திட்டமிட்டு கூலிப்படையினரை வீட்டில் அழைத்து வைத்திருந்ததாக காவல்நிலையத்திற்கு தகவல் கிடைக்க, இதனை அறிந்த காவல் துறையினர் அதிரடியாக சென்று, வெள்ளாந்தெருவில் உள்ள வீட்டிற்குள் நுழைந்திருந்த அஜேஸ்ராம் மற்றும் கூலிப்படையை சேர்ந்த மூவரையும் கத்தியோடு கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் காரைக்கால் பகுதியில் மீண்டும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.