புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று (28.04.2020) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் அனைத்து துறை செயலாளர்கள், மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும், எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் நாராயணசாமி நேர்காணல் அளித்தார். அப்போது அவர், “மாநில அளவில் டெல்லிக்கு அடுத்தப்படியாக கரோனா பரிசோதனை செய்வதில் புதுச்சேரி இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை புதுச்சேரியில் 10 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்துள்ளோம். பொதுமக்களில் 90 சதவீதம் பேர் சமூக இடைவெளியைப் பின்பற்றுகிறார்கள். 85 சதவீதம் பேர் முகக்கவசம் அணிகின்றனர்.
ஆந்திராவிற்குச் சென்று திரும்பிய 7 பேர் ஏனாம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றார்கள். மத்திய அரசின் உத்தரவை அடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மத்திய உள்துறைக்கு எழுதிய கடிதத்தால் மாநில எல்லைக்குள் விடப்பட்டு தனிமைப்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளோம். காரைக்கால் பகுதியைச் சார்ந்த மாணவிகள் மத்திய பிரதேசத்தில் தங்கி உள்ளனர். வாரணாசிக்குச் சென்றவர்கள் திரும்பி வரமுடியாத நிலை உள்ளது. இதுபோன்று பலர் உள்ளனர். மே மாதம் 3- ஆம் தேதிக்குப் பிறகு வெளிமாநிலத்தில் தங்கி இருப்பவர்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
நீதிமன்ற உத்தரவு படி தற்போது உள்ள குற்றவாளிகளைச் சிறைச்சாலைக்கு அனுப்பக் கூடாது என்பதற்காகத் தற்காலிகமாக அரசு கலை கல்லூரியில் அமைக்கப்பட முடிவெடுக்கப்பட்டது. அதற்குப் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளோம்.
காலை நேரத்தில் பொதுமக்கள் அதிகளவில் வெளியே வருகின்றனர். பொதுமக்கள் முடிந்தவரை வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட பல பகுதிகளின் இடையே தமிழக பகுதிகள் வருகின்றது. இந்தச் சிக்கலை நீக்க வெளியில் இருந்து வருபவர்களை முழுமையாக நிறுத்த வேண்டும். மக்கள் தங்களைத் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். புதுச்சேரி மக்கள் வரும் மே மாதம் 3- ஆம் தேதிவரை அமைதி காக்க வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்”. இவ்வாறு புதுச்சேரி முதல்வர் பேசினார்.