உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் மருத்துவ காப்பீடு திட்டமான 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தை டெல்லியில் இருந்து காணொளி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த காணொளி நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
இந்த திட்டத்தின் மூலம் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ செலவை மத்திய அரசு ஏற்கும்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகத்தை வலுப்படுத்த மக்கள் வாக்களித்துள்ளனர்; மாவட்ட வளர்ச்சி கவுன்சில் (District Development Council- DDC) தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் வெளியே வந்து வளர்ச்சிக்கு வாக்களித்தனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதது ஏன்? உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. ஜனநாயகம் குறித்து பாடம் எடுப்போர்தான் புதுச்சேரியில் ஆட்சி செய்கின்றனர். 2011- ஆம் ஆண்டு நடத்த வேண்டிய உள்ளாட்சித் தேர்தலை தற்போதுவரை நடத்தவில்லை" என குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது. எம்.எல்.ஏ.- கவுன்சிலர் அதிகாரப்பகிர்வு, வார்டு மறுவரையறை பிரச்சனையால் தேர்தல் நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது.