புதுச்சேரியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக 1500-க்கும் மேற்பட்டோர் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் நோய்த்தொற்று காரணமாக நோயாளிகளுக்கு அதிகளவு மூச்சுத் திணறல் ஏற்படுவதால் தற்போது ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகின்றது.
இதனையடுத்து புதுச்சேரியில் உள்ள 6 அரசு மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 590 ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பியது. இதேபோன்று 137 வெண்டிலெட்டர்களும் நிரம்பியதாக உள்ளது என்றும், இதேபோன்று புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் உள்ள 606 ஆக்சிஜன் படுக்கைகளும், 58 வெண்டிலேட்டர்களும் நிரம்பியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போதைக்கு காலியாகும் படுக்கைக்காக நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகளுக்கு கோவிட் மருத்துவமனையில் இருந்து நோயாளிகள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இதனால் ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் பற்றாக்குறையை போக்க அரசு மருத்துவமனைகளில் சிறப்பு படுக்கைகள் நாளைக்குள் தயார் செய்யப்பட்டு அங்கு நோயாளிகள் சேர்க்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.