புதுச்சேரியில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் (19/06/2020) வரை கரோனா வைரஸால் 287 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (20/06/2020) ஒரே நாளில் புதுச்சேரியில் 50 பேர், காரைக்கால் பகுதியில் 2 பேர் என 52 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தற்போது புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 341 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில் 203 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 131 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உள்ளது. இந்நிலையில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு கட்டாயமாக அபராதம் விதிக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தி உள்ளதாக புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார்.
மூன்று மாத குழந்தை முதல் 80 வயது முதியவர் வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "புதுச்சேரியில் தினமும் 30 பேர் கரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். இதே நிலை நீடித்தால் ஜுலை மாதத்திற்குள் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டும். இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவை. இந்த நேரத்தில் நமக்கு அருகில் உள்ள மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் முழுஅடைப்பு மேற்கொண்டுள்ளனர். முழு அடைப்பை திரும்பப் பெறும் போது பொருளின் அளவு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
எனவே தயவு செய்து கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். அனைத்து குடிமக்களும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், அடிக்கடி கை கழுவ வேண்டும். புதுச்சேரி குறைந்த மக்கள் தொகையை கொண்டுள்ளது. நம்முடைய ஒருங்கிணைந்த முயற்சிகளால் கரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், வீணாக வெளியே வர வேண்டாம்" என அறிவுறுத்தியுள்ளார்.