புதுச்சேரி மாநிலம் காமராஜர் மணிமண்டபத்தில் பொதுப்பணித்துறைக்கு, டெல்லியில் உள்ள நிறுவனத்துடன் கழிவுநீர் பராமரிப்பு உபகரணம் கொள்முதல் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தலைமை வகித்தார்.புதுவை முதல்வர் ரங்கசாமி முன்னிலை வகித்தார்.
இந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசிதாவது, “பல ஆண்டுகளாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தப்படுத்தவும், பாதாள சாக்கடைகள் உள்ளிட்டவைகளை வெளிநாட்டில் சுத்தம் செய்வது போல் நவீன எந்திரங்கள் மூலமாக சுத்தம் செய்ய எந்திரங்களை வாங்க வேண்டும் என்று கூறி வருகிறேன். தற்போது, எதிர்பார்த்த இந்த திட்டம் செயல் வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் முழுமையாக வெற்றி பெற ஊழியர்கள் கையில் தான் இருக்கிறது. பிறர் மீது பழி போட்டு காலம் தள்ளக் கூடாது.
அரசு செயலர்கள் தங்களிடம் வரும் கோப்புகளை துறை தலைவர்கள், இயக்குநர்களிடம் விவரங்களை கேட்டறிந்து உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், பொதுப்பணித்துறை செயலரின் பணி திருப்திகரமாக இல்லை. அரசு செயலரின் நடவடிக்கையால் பொதுப்பணித்துறையில் பணியாற்றி வரும் அதிகாரிகள் அச்சமுடன் பணியற்றும் சூழல் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். புதுச்சேரி அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்காத காரணத்தினால் புதுவையில் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டு வரமுடியாத சூழல்நிலை ஏற்பட்டிருக்கிறது. புதுவையின் வளர்ச்சிக்கு தலைமை செயலர், அரசு செயலர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இதனை தொடர்ந்து பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், “முதல்வர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். உச்சநீதிமன்றம் ஆளுநர், முதல்வர் ஆகியோர் பிரச்சனைகளை அமர்ந்து பேசி தீர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது. புதுவை தலைமை செயலாளர் திட்ட காலதாமதத்துக்கான காரணம் குறித்து அமர்ந்து பேச வேண்டும். இதற்கான விளக்கத்தை பெற வேண்டும். துறை தோறும் அதிகாரிகள் பேசி காலதாமதத்தை தவிர்க்க வேண்டும். இது தொடர்பாக ஏற்கெனவே தலைமை செயலரிடம் தெரிவித்துள்ளேன்.இதை சுமுகமாக பேசி தீர்க்க வேண்டும்” என்று கூறினார்.