புதுச்சேரியில் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் அறிவுறுத்த மருத்துவ அதிகாரிகளுடனான கூட்டம் நடைபெற்றது.
அதற்கு பின் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர், "புதுச்சேரியில் 16 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 14 பேருக்கு பாதிப்பில்லை. 2 பேருக்கு பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை. அவர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
கரோனா பாதிப்பு ஏற்பட்டால் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளோம். பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளையும் மாநில எல்லைகளில் மருத்துவர்கள் சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்த 6 மருத்துவர்கள் டெல்லி சென்று கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன என்ன சிகிச்சைகள் வழங்க வேண்டும் என்பது குறித்து பயிற்சி எடுத்து வந்துள்ளனர்.
புதுச்சேரியில் இதுவரை ஒருவருக்கு கூட கரோனா பாதிப்பு இல்லை. காரைக்கால் சனீஸ்வரன் கோவில் குளத்தில் பக்தர்கள் குளிக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதனிடையே கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் பயோ- மெட்ரிக் வருகைப் பதிவை இடைக்காலமாக நிறுத்தி வைக்க புதுச்சேரி தலைமை செயலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பள்ளிகளில் ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்த தடை விதித்துள்ளது.