'நிவர்' புயலானது புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததையடுத்து புதுச்சேரி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான், வருவாய்த்துறை அதிகாரிகள் கனகச்செட்டிக்குளம், காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை கிரேன் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று நிறுத்தி வைக்க மீன்வளத்துறைக்கு முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.
மேலும் அங்குள்ள மீனவ மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், அவர்களுக்கு உணவு வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதைத்தொடர்ந்து அவர்களின் படகுகள், வலைகள் பாதுகாப்பாக வைக்கவும் அதற்கான இடங்களை வழங்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் நாராயணசாமி, "புதுச்சேரியில் அனைத்து துறைகளும் குறிப்பாக பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, தீயணைப்புத்துறை, கடலோர காவல்படை, விவசாயத்துறை இவைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து புயலை எதிர்கொள்வதற்கு 24 மணி நேரமும் செயல்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள பொது மக்களை அங்குள்ள மையங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான உணவு தண்ணீர் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியின் பல்வேறு பகுதியில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் மற்றும் பாதுகாப்பற்ற மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது.
மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்சாரத்துறையானது 12.00 மணி நேரத்துக்குள் மின்சாரம் தர தயாராக வைக்கப்பட்டுள்ளது. நகர மற்றும் கிராம பகுதிகளில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தடைப்பட்டால் டீசல் இன்ஜின் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன" என தெரிவித்துள்ளார்.