பிராங்கோ முல்லக்கல்
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அருட் கன்னியர் இல்லத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் தன்னை பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிஷப்பாக பணியாற்றிய பிராங்கோ முல்லக்கல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறியிருந்தார்.
இந்த புகாரை பிராங்கோ முல்லக்கல் மறுத்தார். அவரை கேரளாவுக்கு வரவழைத்து தனிப்படை போலீசார் பல நாட்கள் விசாரணை நடத்திய பின்னர் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கோட்டயத்தில் உள்ள பாலா ஜெயிலில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
கேரள ஐகோர்ட்டில் தனக்கு ஜாமீன் வழங்க கேட்டு பிராங்கோ முல்லக்கல் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, பிராங்கோ முல்லக்கல்லுக்கு கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
பிராங்கோ முல்லக்கல் கேரளாவுக்குள் நுழையக் கூடாது, அவர் தனது பாஸ்போர்ட்டை ஐகோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும், சாட்சியங்களை கலைக்கக் கூடாது, 2 வாரத்திற்கு ஒரு முறை விசாரணை அதிகாரிகள் முன்பு அவர் ஆஜராக வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டு நிபந்தனை விதித்துள்ளது.
இந்த நிலையில், பிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார் குரியாகோஸ் மரணம் அடைந்தார். கேரளாவைச் சேர்ந்த குரியாகோஸ் பஞ்சாப்பில் உள்ள தனியார் விடுதியில் இறந்து கிடந்தார்.