கரோனா நோய் தொற்றினை தடுக்கும் விதமாக புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உள்ளது. இதில் மூன்று பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் மாநில முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு கரோனா பரிசோதனை செய்ய சிறப்பு முகாம் இன்று (23/04/2020) நடைபெற்றது.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற கரோனா மருத்துவப் பரிசோதனை முகாமில் முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, துணை சபாநாயகர் பாலன், அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், எம்.பிக்கள் வைத்திலிங்கம், கோகுலகிருஷ்ணன் மற்றும் எம்.எல்.ஏக்கள் அனைவரும் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.
அவர்களுக்கு RT-PCR (Reverse transcription polymerase chain reaction) முறையில் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் தொண்டையில் இருந்து உமிழ் நீர் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனையில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். பரிசோதனை முடிவுகள் நாளை (24/04/2020) தெரிய வரும்' என அம்மாநில சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.
அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்குவது, ஆய்வு செய்வது என சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுடன் நெருங்கி பழகுவதால் இந்தச் சோதனை எடுக்கப்பட்டது என்றும், RT-PCR மூலம் செய்யப்படும் சோதனை 100 சதவிதம் உண்மையான முடிவைத் தரும் என்றும், விரைவில் களப்பணியில் உள்ளவர்களுக்கும் சோதனை செய்யப்படும் என்றும் சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா குறித்து சந்தேகப்படும் மக்களுக்கு இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் சோதனை தொடங்கப்பட்டுள்ளது. இதனைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும் சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.